இந்தியா vs. சீனா : 1962


1962 இந்திய-சீன போரின் ஐம்பதாவது ஆண்டு இது.  பாகிஸ்தானுடன் வென்ற களங்களை சொல்லி பெருமையடித்துக் கொள்ளும் இந்தியா இப்போரின் தோல்வியை அடக்கியே வாசிக்கிறது.
இலங்கையில் என்ன நடந்தது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். வியூகரீதியாக அச்சிறிய நாட்டை தங்கள் பக்கம் சேர்க்க இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு உருவாக்கிய கொலைக்களம் அது. தமிழராய்ப் பிறந்ததை தவிர வேறெந்த பாவமும் செய்யாத, போருக்கு சம்பந்தமே இல்லாமல் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளுக்கு இன்றும் நீதி கிடைக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு தடையாய் இருப்பது இந்தியாவும் சீனாவும் தான். இந்தியாவை பொறுத்தவரை இப்போதைய ஆளுங்கட்சியின் அப்போதைய தலைவர் கொல்லப்பட்டதிற்கு பழிவாங்குவதை விட இலங்கையில் சீன ஆதிக்கத்தை தவிர்க்க செய்யும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு நாடு சந்தித்த முதல் பெருந்தோல்வி 1962 இல் நடைபெற்ற சீனப்போரின் போதுதான். இப்போதெல்லாம் ஊடகங்களின் மூலமாக தெரியவரும் எல்லை ஊடுருவல் செய்திகளுக்கு பெய்ஜிங் வாய்மூடி இருக்க இந்திய வெளியுறவு துறை அவசர மறுப்பு தெரிவிக்கும். அதாவது எல்லை நிலவரங்களை வெளிப்படுத்த நம் அரசாங்கம் விரும்புவதில்லை.

எதை முன்னிட்டு இந்தப் பிரச்னை?
முதன்முதலில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பொது எல்லை ஏற்பட்டது 1826 இல் பிரிட்டிஷார் இந்தியாவுடன் அசாமை இணைத்த போது. பிரிட்டிஷ்-பர்மிய போரின் விளைவாக இந்த எல்லை பகுதி மேலும் விரிவடைந்தது 1913 -1914 காலத்தில்  திபெத்தின் எல்லை வரையறுத்தல் குறித்து பிரிட்டிஷ், திபெத் மற்றும் சீனா (திபெத்தின் மீது உரிமை கோரியதால்) பிரதிநிதிகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தை சிம்லாவில் நடைபெற்றது. இதில் பிரிட்டிஷ் தரப்பில் (இஸ்ரேல் பாலஸ்தின பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்ட) ஹென்றி மக்மோகன், தான் வரையறுத்த இந்திய திபெத்திய கிழக்கு பகுதி எல்லை வரைபடத்தை முன்வைத்தார். ஆனால் திபெத்தை ஒரு தனி நாடக அங்கீகரிக்க மறுத்து வந்த சீனா இந்த எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளியேறியது. ஆனால் சீனாவின் ஒப்புதல் இல்லாமலும் ஒப்பந்தத்தின் சில ஷரத்துகளை அவர்களிடமிருந்து மறைத்தும் பிரிட்டிஷ்-திபெத் இருதரப்பு ஒப்பந்தமாக மாற்றி கையெழுத்திட்டனர். இதில் குறிப்பிடவேண்டியது சீனாவின் ஒப்புதல் இல்லாமல் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டாமென்று மக்மோகன் ஏற்கனவே எச்சரிக்கபட்டிருந்தார். காரணம் அவரால் வரையறுக்கப்பட்ட அந்த எல்லை துல்லியமானது கிடையாது. புவியியல் ரீதியாகவே மிக கடினமான இந்திய திபெத் எல்லை பகுதி எக்காலத்திலும் முழுமையாக வரையறுக்கபட்டதில்லை. 

மேலும் திபெத்தை சேர்ந்த வடகிழக்கு தவாங் நகரத்தை (இப்போது அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளது) அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் இரண்டாம் உலகபோரை காரணமாக்கி பிரிட்டிஷ் இந்தியாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக திபெத்தின் ஒப்புதலுடன் பயன்படுத்தி வந்தது. இதே போல் காஷ்மீரின் லடாக் பகுதியும் இந்தியாவோடு சீக்கிய போர்குழுக்களால் 1834 அம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதியே.
1949 அக்டோபரில் சீனா மக்கள் குடியரசாக பிரகடனபடுத்தப்பட்ட பிறகு முதல் அங்கிகாரம் கிடைத்தது நம்மிடமிருந்தே. அச்சமயத்தில் திபெத் ஒரு தனி நாடு. 1952 இல் திபெத்தை சீனா ஆக்ரமிக்க தொடங்கிய போது திபெத் தலைநகர் லாசாவில் உள்ள இந்திய தூதரகத்தை  மூடச் சொன்னது பெய்ஜிங். உடனே அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அதை சீனாவிற்கான  இந்திய தூதரகமாக மாற்றிவிடலாம் என்றும், அதற்கு பதில் பம்பாயில் சீன தூதரகம் அமைக்கலாம் என்று தெரிவித்தார். இதன் மூலம் திபெத்திய பீடபூமி அவர்களின் ஆளுகைக்கு உட்பட்டது என்ற நிலைப்பாட்டை  எடுத்தார். கவனிக்க, அதுவரை இல்லாத பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. அதாவது 1952 முதல் இந்திய (திபெத்திய) சீனா எல்லையில் சீன உடுருவல் தொடங்கியது.
1954 இல் இந்திய பாராளமன்றத்தில் அம்பேத்கார் “சீனர்களை திபெத்தை கைப்பற்றிக்கொள்ள அனுமதித்ததன் மூலம், பிரதம மந்திரி அவர்களை நம்மிடையே நெருங்க செய்துவிட்டார், ஆக்ரமிப்பு மனோபாவம் கொண்டவர்கள் அதை நம் எல்லையிலும் தொடர்வார்கள்” என்று எச்சரித்தார்.
இதெல்லாம் தெரிந்திருந்தும் பிரதமர் நேரு பாராளுமன்றத்திலும், சீன தலைவர்களின் வருகையின் போதும் மக்மோகன் எல்லைகோட்டை வலியுறுத்தினர், ஒரு சமயம் அவர் ஜான்சன் என்பவர் கொடுத்த 1865 வருட ஒப்பந்த வரைபடத்தை (இதிலும் சீனாவின் எதிர்ப்பை மீறி அக்சாய் சின் பகுதி கஷ்மிரோடு  இணைக்கப்பட்டிருந்தது) முன்வைத்தார்.
இது போன்ற குழப்பங்களை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒப்புக்கொண்ட அவர், திபெத்தில் சீனாவின் ஆக்ரமிப்பை அங்கிகரித்ததின் பயனாக சீனா இந்த பிரச்னையில் இந்தியாவுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் என்று எதிர்பார்த்தார். அதாவது இந்தியா தனக்கு சொந்தமேயில்லாத பகுதிகளுக்கு உரிமை கோரியது.
எல்லை பகுதியில் சீன உடுருவல்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வெளிவர தொடங்கிய பின் பலமுறை இந்திய தரப்பிலிருந்து இந்திய-சின எல்லை வரைபடம் சீனாவிற்கு வழங்கப்பட்டது. 1952 இல் தொடங்கி 60 வரை இந்தியா அளித்த பல வரைபடங்கள் மோசடியானவை அல்லது திருத்தம் செய்யப்பட்டவை என்றொரு  கருத்து உள்ளது.
மிகச் சிறந்த சோசியலிசவாதி என்று அறியப்பட்ட அவர் மாவோவின் பெரும் பாய்ச்சலில் கிட்டத்தட்ட ஒரு கோடி சீனர்கள் இறந்த போதும், திபெத்தில் 10  லட்சம் மக்களை கொன்று குவித்து அந்நாட்டை அக்ரமித்தபோதும் சீன மக்கள் குடியரசை உலக அளவில் முன்னிறுத்தினார். 1955 இல் அமெரிக்காவும், ரஷ்யாவும் இந்தியாவை ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர  உறுப்பினராக்க முயன்றன. ஆனால் மிக ஆச்சர்யமான காரணங்களை  கூறி அதை அவர் சீனாவிற்கு வழங்க முடிவு செய்தார். இன்றும் இம்முடிவு உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
நவம்பர் 1956 இல் அப்போதைய சீன அதிபர் தரப்பிலிருந்து இரு நாடுகளுக்கிடையே எந்த எல்லை பிரச்னையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. சீன அரசாங்க வரைபடங்கள் அப்பொழுது கிட்டத்தட்ட 120000 சதுர கிமி பரப்பளவு கொண்ட இந்திய பகுதியை அவர்களுடையதாக காட்டிகொண்டிருந்தது.
1958 இல் இருந்து இந்திய படைகளின் நடமாட்டம் இரு நாட்டு எல்லையில் அதிகரிக்கப்பட்டதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். இன்னும் சில பிரச்சனைக்குரிய சீன பகுதிகளில் இந்தியா தன் ராணுவத்தை ஊடுருவ செய்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
1961 ஆம்  வருடம் வெற்றிகரமான  கோவா  போருக்கு பிறகு நேருவின் நடவடிக்கையில் சில மாற்றம் தெரிந்தது. அதாவது சீனாவை கண்டு  இந்தியா அஞ்சவில்லை என்றும் போரை எதிர்கொள்ள தயார் என்று முதல் உலக போர் காலத்திய இராணுவத்தை வைத்துக்கொண்டு அறிவித்தார். 1962 இல் மே மாதம் பாராளமன்றத்தில் அறிவித்தார். ஆனால் அதற்கு முன்னரே  எல்லையில் டாங்கிகள், மற்றும் கனரக ஆயுதங்களை  குவித்த சினாவின்  நடவடிக்கைகளை அவர் உணர தவறினார்.
அப்போதைய இந்திய உள்துறை அமைச்சர்  “இந்தியாவிற்கு சொந்தமான பகுதிகளில் இருந்து சீனா வெளியேற வேண்டும் என்றும் இல்லாவிடில் கோவாவில் போர்சுகிசெயர்களுக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார். இதே போன்றதொரு அறிக்கை அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் வந்தது.
பிரச்சனையே நம் ஆட்கள் இதை உணர்வுபூர்வமாக அணுகியதால் தான்.
1962 இல் சீன ஆட்சியாளர்கள் இந்தியாவின் படை பெருக்கம் அவர்களுக்கெதிரான ஒரு பெரும் தாக்குதலின் முன்னோட்டமாக கருத தொடங்கினர்.
1962 அக்டோபர் 12 இல் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற தாம் உத்தரவிட்டுள்ளதாக நேரு அறிவித்தார். அக்டோபர் 14 அன்று சீன அரசாங்க பத்திரிக்கையான  மக்கள் தினசரியில் “செஞ்சீன படைகளை நேரு தவறாக கணக்கிட்டுள்ளதாகவும், அவரின் அரசியல் விளையாட்டிற்கு இந்திய துருப்புகளை பலி கொடுக்க வேண்டாமென்று” எச்சரிக்கப்பட்டிருந்தது
அக்டோபர் 20இல் தொடங்கிய எவ்வித ஒழுங்குமுறையும் அற்ற சீன தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 1600பேர் உயிரிழந்தனர் . அப்போது பல இந்திய தலைவர்கள்  திபெத்தில் சீன ஆக்கரமிப்பை  ஒப்புகொண்டது தவறு என்றும், சிலர் ஒரு படி மேலே போய் திபெத் இந்தியாவின் ஒருங்கினைந்த பகுதி என்றும் கூறினர்.இவர்களின் அறிக்கையினுடே நவீன ஆயுதங்களோடு சீனா எல்லை தாண்டி பல ஆயிரக்கணக்கான  பரப்பளவு பகுதியை வென்றெடுத்தது. மேற்கத்திய அரசியல் வல்லுனர்கள் அப்போதும் சீனாவிற்கு சொந்தமான பல பகுதிகளை இந்தியா இன்னும் இழக்கவில்லை என்று குறிப்பிட்டனர்.
இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் 1959 இல் திபெத்தின் தலைமை நிர்வாகி/மத குரு தலாய் லாமாவின் இந்திய தஞ்சம் புகுதல் போருக்கு ஒரு காரணமாக அறியப்படவில்லை.  போருக்கு முன்னும் பின்னும் இந்தியாவின் எல்லை பகுதி ஆக்கிரமிப்பு மற்றும் பேச்சுவார்த்தைக்கு முயலாத போக்கே இதற்கு காரணம் என்று  சீனா அரசாங்க ஊடகங்கள் (1958 -1963) அப்போது செய்தி வாசித்தன. அதாவது தலாய் லாமா இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தாலும் போர் நிகழ்ந்திருக்கும்.  இவ்வளவு சிக்கலான  பிரச்னையை தீர்த்து கொள்ள போர் நடந்து ஐம்பதாவது வருடத்தை அடைந்த போதும் பெருமளவில்  முயற்சி செய்யப்படவில்லை.  60களில் இருந்த நிலையில் இப்போது சீனாவும் இல்லை, பொருளாதார ரீதியாக முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் அந்நாடு எல்லை பிரச்சனைகளில் ஆதாயம் தேட முனைகிறது. மிகப்பெரிய எல்லை பகுதியை கொண்ட சீனா கிட்டத்தட்ட 10க்கும்  மேற்பட்ட நாடுகளுடன் எல்லை தகராறு கொண்டது. சீனா பல லட்சம் கோடி மதிப்புள்ள  எண்ணெய், இயற்கை எரிவாயு  மற்றும் அறிய தாதுக்கள் நிறைந்த வியட்நாம், மலேசியா, பிலிப்ஃபைன்ஸ், ப்ருனே போன்ற நாடுகள் அமைந்த தென் சீனக்கடல்  பகுதியை உரிமை கோருகிறது.


இதை தவிர்த்து  சீனா மற்றும் ஜப்பானின் ஜென்ம பகை உலகறிந்தது. மேலும் இன்று சீனா உலக அளவில் வர்த்தக மற்றும் ராணுவ ரீதியாகவும் பெரும் அச்சுறுத்தலாக பார்க்கபடுகிறது. அதாவது இரண்டாம் உலக போருக்கு பிறகு இன்றுவரை எதாவது ஒருவகையில் எல்லா நாடுகளின் விவகாரத்திலும் முக்கை நுழைக்கும் அமெரிக்காவின் பணியை வெகு விரைவில் சீனா கைப்பற்றலாம்.
பல முன்னுதாரணங்கள் இதற்கு ஏற்கனவே உள்ளது. 1963 க்கு பிறகு ஆப்ரிக்க நாடுகளில் சீனாவின் தலையிடல் (புரட்சி குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி) பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. இந்தோனசியாவில் ராணுவ ஆட்சியை கவிழ்க்க 1965 இல் நடந்த சீனாவின் முயற்சி தோல்வியடைந்து அங்கு பல ஆயிரம் பேர் இறந்த பிறகு பிஜிங்கிடமிருந்து  “அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா” என்ற ரீதியில் பதில் வந்தது!!
திபெத் நாட்டை ஆக்ரமித்தது போல் மிக விரைவில் தைவானை (சீன குடியரசு) தங்களுடன் இணைக்க முயலும் சீனாவை இப்போது  தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாவலனாக கருதும் இரண்டு நாடுகள் இலங்கையும், பாகிஸ்தானும்.
நாம் இப்போது அடிக்கடி கேள்விப்படும் சீனாவின் இந்திய பெருங்கடல் வியுகம் “முத்து மாலை வியுகம்” என்ற பெயரில் வெளியே தெரிய வந்தது 80களின் தொடக்கத்தில்.  அதாவது பர்மா, வங்காள தேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் துறைமுகம் அமைக்க உதவி செய்து அதை சீனாவின் வர்த்தக  பயன்பாட்டுக்கு மாற்றிகொள்வது.  போர் சமயத்தில் இந்த துறைமுகங்கள் ராணுவரீதியாகவும் பயன்படலாம்.
சரி, ஒருவேளை சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்கும் பட்சத்தில் அதன் காரணங்கள் இவ்வாறாக இருக்கலாம்:
  • பெய்ஜிங்கின் நீண்ட நாள் விருப்பமான இறுதி பாடம் புகட்டுவது. (இந்தியா – ஜப்பான் – தைவான் முன்றுமே இந்த வளையத்தில் வரும்)
  •  பலரின் கணிப்புப்படி பொருளாதார ரீதியாக இந்தியா சீனாவை நெருங்கும்போது அதை மட்டுப்படுத்தவும் தாக்கலாம்.
  • சர்வாதிகார ஆட்சியில் ஏற்படும் உள்நாட்டு குழப்பங்களை திசை திருப்ப போரை பயன்படுத்துவது (இது ஒரு பிரபலமான கருத்து )
மேலும் 2009  ஏப்ரல் மாதம் சீன வெளியுறவு தொடர்பான ஒரு அரசியல் கட்டுரையில், “ஆசிய அளவில் சீனா பெரும் வல்லரசாக வளர வேண்டுமானால், சீனாவின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமானால், அஸ்ஸாமியர்கள், தமிழர்கள், காஷ்மீரிகள் ஆகிய மூன்று இனத்தவரையும் துணைக்கு வைத்துக் கொண்டால், அவர்கள் மூலம் இந்தியாவைத் துண்டு துண்டாகப் பிரிக்க முடியும். இவர்களைப் பிரித்துத் தனித் தனி நாடுகளாக மாற்றி விட்டால் இந்தியா பலமிழந்து போய் விடும்.” என்று கூறப்பட்டிருந்தது
இக்கருத்துக்கு இந்தியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய பொது இது சீன அரசின் கருத்தல்ல என்று கூறப்பட்டது. கடுமையான தணிக்கை முறை அமலில் உள்ள அந்நாட்டில் மைய அரசுக்கு தெரியாமல் இவ்வறிக்கை வெளிவந்திருக்க வாய்ப்பில்லை.
சமீபத்தில் இந்திய சீன எல்லை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. அச்சமயத்தில் டெல்லியில் நடைபெற்ற புத்த மத மாநாட்டில் தலாய் லாமா பங்கேற்க இருந்ததே காரணம். தலாய் லாமாவை பிரிவினைவாதி என்று குற்றம் சாட்டி அவர் எந்த நாட்டிற்க்கு சென்றாலும் கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் சீனா கஷ்மீர் பிரிவினைவாதிகளையும், நக்சல் மற்றும் வடகிழக்கு மாநில போராளிகளையும் வெளிப்படையாக வரவேற்று உபசரிப்பது ஏன்? இத்தனைக்கும் தலாய் லாமா கோருவது சுதந்திரமல்ல, கொடூர அடக்குமுறையற்ற சுயாட்சியே.
திபெத் நாட்டை ஆக்ரமித்த பிறகு டெல்லி சீனாவிற்கு கூப்பிடு தொலைவில் மிக சுலபமான இலக்காக ஆகிவிட்டது.  இந்த பிரச்சனை நம்மவர்களால் படுமோசமாக கையாளப்படும் நிலையில் இதில் அதிகம் லாபம் பார்ப்பது அமெரிக்காவும் மற்ற பிற ஆயுத வியாபாரிகளும் தான்.  சீனாவுக்கு நிகராக இராணுவத்தின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்ற இந்திய பாதுகாப்பு அமைச்சரின் சமிபத்திய அறிக்கையை கவனித்திருப்பீர்கள்.  அப்படி ஒன்றை நிஜமாகவே அரசு முயற்சி செய்தால் இங்கு ராணுவத்தை தவிர வேறு எதற்கும் செலவு செய்ய இயலாது. அவர்களுக்கு நிகராக சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் சமமடைய இந்த அறிவீலிகள் முயல்வதில்லை.
சுதந்திரமடைந்து 62 வருடங்கள் ஆனபிறகும் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறாத நிலையில் இவ்வாறான ஆயுதமயமாக்கும் முயற்சிகள் தற்கொலைக்கு ஒப்பானது.    நம் பக்கம் நியாயமே இல்லாத போது வறட்டு பிடிவாதமாக பிரச்னையை மேலும் எதற்கு சிக்கலாக்க வேண்டும்?
சீனாவின் உலகளாவிய நடவடிக்கைகள் யூகிக்கமுடியாத அளவுக்கு விபரீதமாக சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், நம் தரப்பின் பலஹினமான நிலையை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டால் அருணாச்சல் பகுதியை விட்டுகொடுக்காமலேயே உடன்படிக்கை ஏற்படுத்தி கொள்ள முடியும். இதில் தலாய் லாமா பிரச்சனையெல்லாம் கண்டிப்பாக பெரிய இடையுறாக இருக்காது. 1959  இல் அவர் இந்தியாவிற்கு பதிலாக வேறொரு நாட்டிற்கு சென்றிருந்தாலும் பிரச்சனை தொடர்ந்திருக்கும் அல்லது திபெத்தை சீனா கைப்பற்றாமல் இருந்திருந்தால் அதை இந்தியா செய்திருக்கும். அதே போல் சிலர் இங்குள்ள  திபெத்திய அகதிகளின்  வாழ்க்கை தரத்தோடு இலங்கை அகதிகளின் மோசமான நிலையை ஒப்பிட்டு திபெத்தியர்களை  குற்றம்சாட்டுகின்றனர்.  இலங்கை அகதிகளின்  இந்நிலைக்கு காரணம் மாநில மற்றும் மத்திய  அரசாங்கங்கள் தானே? மேலும் 1962 வரை  திபெத்தியர்களும் சாலையோரத்திலும், பிச்சை எடுத்தும் தான் வாழ்ந்தனர். போருக்கு பிறகு சீனாவிற்கு எதிரான மனநிலை இந்த அகதிகளுக்கு அதரவாக திரும்பியதே இவர்களின் தற்போதைய நல்ல நிலைமைக்கு காரணம்.  ஈழ அகதிகளும்  கனடா , ஐரோப்பா நாடுகளில் இப்பொழுது நன்றாக தானே உள்ளனர்? இதை அங்குள்ளவர்கள் ஆட்சேபித்தால் நிலைமை என்னாவது? இந்தியா சீன  பிரச்சனைக்கு  தலாய் லாமா  மட்டுமே காரணம் என்பது ஒரு கேலிக்கூத்தான வாதமே.
வெளிப்படையாகவே ஹிலாரி கிளிண்டன் சீனாவுடன் அமெரிக்காவிற்கு அரசியல் மற்றும் வர்த்தக போட்டி உண்டு என்று அறிவித்திருக்கும் சூழ்நிலையில் பெய்ஜிங் உடன் எப்பேற்பட்டாவது சமாதானம் ஏற்படுத்திக் கொள்வது நமக்கு பெருமளவில் உதவும். வெளியுறவு துறையில் டெல்லி கைக்கொள்ளும் மிதவாத போக்கு இம்முயற்சிக்கு உதவலாம்.
இதற்கு தேவை அரசியல் ரீதியான உறுதியே. முட்டாள்தனமான தேசபக்தி காய்ச்சலில் இருந்து நம்மவர்கள் விடுப்பட்டு கடந்த ஐம்பது வருடங்களாக நிலவும் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர இதை துணிச்சலுடன் முயற்சி செய்தால் லாபம் நமக்குத்தானயன்றி, அவர்களுக்கல்ல.